Tuesday, 14 May 2013

ஆசான் சி.முட்லூர். சின்னத்தம்பி




சி.முட்லூர். சின்னத்தம்பி வாத்தியார் [செண்டுகாரர்]

                நலிந்துக் கொண்டிருக்கும் தமிழகத் தற்காப்புக் கலையின் முறைகளையும் நுணுக்கங்களையும் சேகிரித்து பதிவு செய்யவேண்டும் என்று திட்டமிட்டோம். தற்காப்புக் கலையினை நன்குணர்ந்த ஆசான்களைத் தேடி சந்திப்பது கடினமான காரியமானாலும், மிகவும் பயனுள்ள காரியமாகும். முதற்கட்டமாக வயதான மூத்த ஆசான்களை தேடி சந்திப்பது என்றும், அவர்களை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கடலூர் உள்ள மூத்த தற்காப்புக் கலை ஆசான்களின் பெயர்பட்டியல் தயார் செய்துக்கொண்டு பயணம் மேற்கொண்டோம்.

                தென்னார்காடு மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள சி.முட்லூரில் வசிக்கும் திரு.சின்னத்தம்பி வாத்தியார் அவர்களை குரு மரியாதை சகிதமாக சந்தித்தோம். எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவரை, வாழ்வின் அந்தியக்காலத்தில் சந்திக்க நேர்ந்துவிட்டதே என வருத்தமடைந்தோம். கொஞ்சம் நினைவு குன்றிய நிலையில் காணப்பட்டார். என்றாலும், கலையைப் பற்றி பேசப்பேச உற்சாகமடைந்து எழுந்தார், நாங்கள் ''ஒன்றும் செய்யாதீர்கள்'' என வேண்டியும், சில அடிமுறைகளை செய்துக்காட்ட எத்தனித்தார், ஆனால் உடல் ஒத்துழைக்காமல் களைப்படைந்தார். ''சில மாதங்களுக்கு முன்னால் வந்திருந்தால், முடிந்தவரை கலையை காட்டிக் கொடுத்திருப்பேனே'' எனக் கூறி கலங்கினார்.

                இவர் தன் இருபதாவது வயதில் இக்கலையை கற்க தொடங்கினாராம். கிட்டதட்ட 17 ஆசான்களை சந்தித்துள்ளார். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதும், தெரிந்துக் கொண்டதும் ஏராளமென்றார். ''ஒரே வாத்தியாரிடம் கற்றுக்கொள்வதைக் காட்டிலூம், பல வாத்தியார்களிடம் சென்றால்தான் கலையை முழுசா கற்றுக்கொள்ள முடியும்'' என்றார்.


                இவர் சிதம்பரம் வட்டத்தில் பு.முட்லூர், கவரப்பட்டு, பிச்சாவரம், தைக்கால், சின்னக்குடி, தா.சோ.பேட்டை மற்றும் செம்மங்குப்பம் [கடலூர்] போன்ற ஊர்களில் பள்ளிக் கூடங்கள் நடத்தியுள்ளார். என்றாலும், தன்னிடம் உள்ள கலை முழுமையும் கற்றுகொண்ட மாணவர் ஒருவருமில்லை என ஆதங்கமாக கூறினார்.
               
                இவர் ஆங்கிலேயர் காலத்தில், கனோசியிலிருந்து வாசனைப் பொருள்களை [செண்ட்] வரவழைத்து வியாபாரம் செய்து தனது வாழ்கையை நடத்திவந்தார். ஆகவே இவரை ''செண்டுக்காரர்'' என்று எல்லோரும் அழைக்கின்றனர். இவருக்கு ஐந்து பிள்ளைகள் என்றாலும் ஒருவர்கூட இக்கலையைக் கற்றுக்கொள்ளவில்லை.

                இவருக்கு பூரான் செரீப் விளையாட்டு, இஸ்தெல்லா விளையாட்டு, சிலம்பம், சுருள், பிடிவகைகள் போன்ற  தற்காப்புக்கலை வகைகள் தெரியும் என்றார். மேலும் ''சீலா'' என்கிற விளையாட்டும் தெரியுமென்றார். இவரிடம் பயின்ற உள்ளூர் மாணவர் திரு. சின்னத்தம்பி ''இவர் அதிகமாக பயிற்சி தந்தது ''சீலா'' விளையாட்டைதான். இது அதிகமான பிடிகளையும், அடிமுறைகளையும் கொண்டது'' என்றார். மேலும் குச்சி பிடிகளையும், குச்சிக்கு எதிர் பிடிகளையும் தங்களுக்கு சொல்லித் தந்ததாக கூறினார்.

                ''கலைக்கு  முடிவில்லை, அதற்கு வரம்பும் போடக்கூடாது'' என்று கூறிய போதிலும், எல்லாம் மூன்றுக்குள் அடக்கம்; ஒவ்வொன்றும் நான்கு பிரிவாகி மொத்தம் 12 ஆகிறது என்று வரையறைகளையும் கூறினார். அவைகள் என்ன என்று சரியாக சொல்லமுடியாமல், ''நிறைய மறதியாயிருக்கு'' என்று கூறி கலக்கமடைந்தார். வர்மம் பற்றி கேட்ட போது, ''மறைத்து வைத்து சொல்லித் தருவதெல்லாம் வர்மம்தான்'' என்றார். ''எதிரியின் நோக்கையும் அடிமானத்தையும் கொண்டு அவனை கணித்துவிடலாம்'' என்றார்.

                மறதியால் யோசனையில் மூழ்கினார், அவ்வப்போது வாத்தைகள் தடுமாறின, உடல் தளர்வும், கைகால் ஆட்டமும் காணப்பட்டன.

                ''பெற்றோர்கள் அடுத்த தலைமுறைக்கு சொத்துக்களை விட்டு செல்கிறார்கள், நாமும் மூதாதையரிடமிருந்து அதைத்தான் எதிர்பார்க்கிறோம். அவர்களின் அறிவு, அனுபவம் ஆகியவையும் தமக்கு தேவை என்பதை மறந்துவிடுகிறோம். ஆசானை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்''  என்று  அவருடைய இளைய மகனிடம் சொல்லிவிட்டு திரும்பினோம்.

[பேட்டி கண்டவர்கள் :- சி.இரா.இளங்கோவன் மற்றும் ஆ.மோகன்,   நாள் :- 20.12.1987, நன்றி :-''தூரிகை'' சனவரி,1988 ]

No comments:

Post a Comment