ஆசான் சம்சுதீன் [ஆயி]
தமிழக தற்காப்புக் கலையைப் பயிற்றுவிக்கும் ஆசான்களைப் பற்றி, அவர்களின் கலை நுணுக்கங்களைப் பற்றி, நேரில்சென்று தகவல்களை சேகரித்து, பதிவுசெய்யும் பணியை தொடங்கியுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள தற்காப்புக் கலைகளுள் 'கழி' அல்லது 'குச்சி' விளையாட்டு என்று அழைக்கப்படும் 'சிலம்பு விளையாட்டு' முக்கியமான ஒன்றாகும். முன்பு தமிழகத்தில் பெரும்பான்மையான
கிராமங்களில் இவ்விளையாட்டு சொல்லித்தரப்பட்டது. சிறுவர்களும், இளைஞர்களும் அறுவடை முடிந்த காலங்களில் பயிற்சியினைத் தொடங்கி, மூன்று அல்லது நான்கு மாதங்களில் இவ்விளையாட்டினை கற்றுக்கொண்டார்கள்.
இப்போதும் சில சிலம்பு வாத்தியார்கள் கிராமம் தோறும் சென்று, குறுகிய கால பள்ளிக்கூடங்கள் தொடங்கி நடத்தி, பாடங்களை முடித்து, மாணவர்களுக்கு
அரங்கேற்றம் செய்து பள்ளிக்கூடத்தை முடித்துக்கொள்கிறார்கள். சில ஆசான்கள் சிலம்பு
விளையாட்டோடு குத்து, மடுவு, சுருள்கத்தி, வாள்வீச்சு போன்ற விளையாட்டுகளிலும்
பயிற்சி தருகிறார்கள்.
சிதம்பரம் பகுதியில் ''ஆயி'' என்றழைக்கப்படும் சிலம்பு ஆசான் ''சம்சுதீன்'' அவர்களை, வடக்கு மெயின்ரோடு மசூதி எதிரிலுள்ள குறுகிய சந்தில் அவர் இல்லத்தில்
சந்தித்தோம். சிதம்பரம் பகுதியில் இவருடைய விளையாட்டுதான் மிகநுட்பம் உடையது என்று
சொல்லப்படுகிறது. தற்போது இவருக்கு வயது 75 ஆனாலும், குச்சியினை எடுத்து விளையாடுகின்றபோது
ஒரு இளைஞனுடைய வேகத்தை காணமுடிந்தது.
இவர் இவ்விளையாட்டு முழுவதையும் தன் தந்தை ஜெய்லானியிடமிருந்து
கற்றுக்கொண்டதாக கூறுகிறார். இவரின் தந்தை அக்காலத்தில் இப்பகுதியில்
சிலம்புக்கலையில் சிறந்து விளங்கிய நூர்ஷா ராவுத்தரிடம் பயின்றதாக தெரிவித்தார். 'ஆயி' அவர்கள் திருமுல்லைவாசல், லால்பேட்டை, புதுப்பட்டினம், சிதம்பரம் ஆகிய இடங்களில் பள்ளிக்கூடம் நடத்தியிருக்கிறார். தற்போது வயதான
நிலையில் பள்ளிக்கூடம் நடத்தவில்லை என்றாலும் குறிப்பிட்ட சிலருக்கு பயிற்சி தந்துக்கொண்டிருக்கிறார்.
இவருக்கு சிலம்புக் கலையில் துலுக்கானம், கள்ளப்பத்து, கர்நாடகம், குறவஞ்சி ஆகியவை தெரிந்திருந்தாலும் துலுக்கானம் தான் சிறந்தது என்கிறார்.
மேலும் இவர் மடுவு, சுருள், பட்டாகத்தி விளையாட்டுகளிலும் பயிற்சி அளித்துள்ளார். சிலம்பு விளையாட்டில், எதிரியை தாக்கும் விளையாட்டு, கழி உடைக்கிற
விளையாட்டு [கோலாட்டம்] என்று இரண்டு விளையாட்டு உண்டு என்று நகைச்சுவையாக
கூறுகிறார். சில விளையாட்டுகளில் சத்தம்தான் அதிகமாக வருமேயொழிய அடிமுறைகள் குறைவு
என்பதை சுட்டிக்காட்டுகிறார். இவருடைய கழி விளையாட்டில் குத்து முறைகள் அதிகம்
உள்ளது என்பதை விளக்குகிறார்.
இக்கலையை சொல்லித் தருவதற்குமுன், இக்கலையை தற்காப்புக்கும், ஞாயமான
பிரச்சனைக்கும்தான் பயன்படுத்த வேண்டுமே யொழிய வீண் சண்டைகளுக்கு பயன்படுத்தக்
கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டுதான் பாடத்தை ஆரம்பிக்கிறார்.
வளர்பிறை காலத்தில்தான் இப்பயிற்சியினை தொடங்க வேண்டுமென்ற ஒரு சம்பிரதாயத்தை
சில ஆசான்கள் கடைபிடிக்கிறார்கள். ஆனால், அது அப்படியல்ல, வளர்பிறை காலத்தில்தான்
நிலவு வெளிச்சம் நன்றாக இருக்கும், அப்போது பயிற்சியினை
ஆரம்பித்தால் குச்சி வருகிறபோது கட்டுமானம் எளிதாக புரியும். ஆனால் இக்காலங்களில்
மின் ஒளி வாய்ப்பு இருப்பதால் எக்காலத்திலும் தொடங்கலாம் என்று, காலத்திகேற்ற கருத்தை கொண்டுள்ளார்.
சிலம்பு விளையாட்டில் மொத்தம் 4 வகை பிடிகள் உள்ளன என்றார். எல்லா வகை சிலம்பு விளயாட்டிலும் பாடங்கள் பத்து தான் உள்ளன என்றார். ''கால்மானம், ஒண்டி, எந்தல், கிரிக்கி, உடான் போன்ற அடிப்படை நன்றாக தெரிந்தால்தான் எதிரியை வீழ்த்த முடியும். எனது
மாணர்கள் இதுவரை யாரிடமும் தோற்றதில்லை, அதற்கு காரணம் அடிப்படையை நன்றாக சொல்லித் தருவதுதான்'' என்று விளக்கமளித்தார். இவருடைய விளையாட்டில் ''பொட்டு வைத்தல்'' மற்றும் நெத்தி,கண், கை கால் கட்டைவிரல் போன்றவற்றைத்
தாக்குகிற நுட்பங்கள் அதிகமாக உள்ளன என்று கூறுகிறார்.
இவர் தன் மாணவர்களுக்கு இரட்டைக்கழி, கட்டைக்கழி விளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறார். கட்டைக்குச்சி, அரைக்கழி, பொடிக்குச்சி. விளையாட்டு
இவரிடத்தில்தான் சிறப்பாக உள்ளது என்று, பலரிடம் பயிற்சி பெற்று தற்போது இவரிடம் பயிற்சி பெறும் திரு.இராமநாதன்
[சிதம்பரம்] கூறுகிறார். ஆசான் ஆயி அவர்கள், சில வைத்திய முறைளையும் தெரிந்து வைத்துள்ளார். எலும்புமுறிவு, வர்மத் தாக்குதல், சுளுக்கு, தசைபிடிப்பு போன்றவற்றிற்கு சிகிச்சை செய்கிறார். இவரிடம் முழுமையாக
கற்றுக்கொண்டவர்கள் சிதம்பரம் திருநாவுக்கரசு, தில்லைக் கோவிந்தன் [இவர் தற்போது பல இடங்களில் பள்ளிக்கூடம் நடத்துகிறார்], மற்றும் செல்லதுரை ஆகியோரைக்
குறிப்பிட்டு சொல்கிறார்.
அக்காலத்தில் திருவிழா சமயங்களில் நடக்கும் போட்டிகளில் குறிப்பாக மாயவரம், கொரநாடு, மதுரை, சேலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வாத்தியார்களிடம் போட்டியிட்டு வென்றதாக
குறிப்பிடுகிறார். ஆசான் கட்டபொம்மன் கொட்டடி சின்னதம்பி இவருடைய விளையாட்டை
கண்டுவியந்து, தனது மாணவர்களில் சிலருக்கு பயிற்சி
தருமாறு கேட்டுக் கொண்டதன்பேரில் பயிற்சி தந்ததாக கூறி மகிழ்கிறார்.
போட்டி என்று வந்துவிட்டால் பெற்ற பிள்ளை என்றாலும் பார்க்க கூடாது, விளையாட்டுதான் முக்கியம் என்றார். ஒரு சமயம் மதுரைக்காரர் ஒருவரிடம் போட்டி
ஏற்பட்டபோது, வேலைக்காரன் ஒருவனிடம் வெற்றிலைப்பாக்கு
வாங்கித்தந்து போடச்சொல்லி, தோற்றவர் முகத்தில்
உமிழச் செய்வது என்று பந்தயம் கட்டி, வெற்றி பெற்றபின் அவரை மன்னித்து விட்டதாக கூறி சிரித்தார்.
சிலம்பு கலையை கற்றுக்கொள்தில் இப்போது மக்களிடம் ஆர்வம் குறைந்துவிட்டது
என்று வருத்தமுடம் கூறிய ஆசான், சாவதற்குள் இக்கலையை
முழுமையாக சொல்லித் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
[பேட்டி கண்டவர்:- சி.இரா.இளங்கோவன், நாள்:- 17.081987, நன்றி:-''தூரிகை'' ஆகஸ்ட் 1987.].
No comments:
Post a Comment