விளநகர் ஆசான் மின்னல் இராதா
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள விளநகரில், தலைமைக் காவலர் பணியிலிருந்து ஓய்வு
பெற்ற பின்பும் சிலம்புக் கலையைப் போதித்துவரும் ''மின்னல் இராதா'' என்றைக்கப்படும் ஆசான் இராதாகிருஷ்ணன்[62] அவர்களை 03.06.98 அன்று மாலை சந்தித்தோம். அவர் அளித்த பேட்டியிலிருந்து கிடைத்த செய்திகளின்
சுருக்கம் -
இவரும், இவருடைய சகோதரர்கள் ஆசான் சுப்பரமணியன், ஆசான் முத்துமோகன் மூவரும்
புகழ்பெற்ற ''நெய்வேலி சிலம்பக் கழகத்தின்'' நிறுவனர்கள் ஆவர். இவர்களின் தந்தை
திரு.முத்தைய நயினார் பல ஆசான்களை அழைத்துவந்து வீடும் உணவும் அளித்து தனது
புதல்வர்களுக்கு பயற்சியளிக்கச் செய்துள்ளார். பன்னிரெண்டாம் வயதிலிருந்து பல
ஆசான்களிடம் பயின்று, போலீஸ் பணியிலிருந்து ஓய்வு பெறும்வரையிலும் பல ஆசான்களைச் சந்தித்து பல
யுத்திமுறைகளை அறிந்து தொகுத்து வைத்துள்ளார். விளநகர் ஆசான் மின்னல் இராதா
அவர்களை ''தற்காப்புக் கலையின் கருத்துக் கருவூலம்'' என்றால் மிகையாகாது. இவர் தனது
ஆசான்களைப் பற்றி தெரிவித்த செய்திகள் அறியக் கிடைக்காதவை. அவற்றை அப்படியே பதிவு
செய்துள்ளோம்.
இவரின் ஆசான்கள்
இவர் முதலில்
கற்றுக்கொண்டது குத்துக்கலையைத்தான். இவரின் முதல் ஆசான் கெண்டியூர்
குஞ்சிதப்பாதம். மயிலாடுதுறை வட்டம், குத்தாலம் அருகில் உள்ளது கெண்டியூர். இவர் தற்போது 89 வயதாகி நினைவுகுன்றிய நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இவரிடம் ''கரந்தை'' குத்துக்கலையை முன்றாண்டுகாலம் பயின்றார். [''கரந்தை'' குத்துக்கலையின்
பெயர்க் காரணம் தெரியவில்லை. ஆசான் பெயரோடு அவரது ஊரின் பெயரை இணைத்து வழங்குவது
தற்காப்புக் கலையில் மரபாக உள்ளது. ஒருவேளை, தஞ்சாவூர் அருகில் உள்ள ''கரந்தை'' என்ற ஊரைச்சேர்ந்த ஆசான் யாராவது சென்ற தலைமுறையில் சிறந்து
விளங்கியிருக்கலாம். ஆசான் பெயர் மறைந்து ஊரின் பெயரே அவர் போதித்த கலையின் பெயராக
நிலைபெற்றிருக்கலாம்.]
தனது ஆசானின் [ஆசான்
கெண்டியூர் குஞ்சி] ஆசான்களைப் பற்றியும் ''மின்னல்'' அவர்கள் அறிந்து வைத்துள்ளார். அவர்கள், நாகூர் பக்கிரிசாமி, சிங்கக்குட்டி பெருமாள்
நாடார்[நாகூர்], [இவருக்கு ''சிங்ககுட்டி'' என்ற அடைமொழியைச் சூட்டியவர், புகழ்பெற்ற ஆசான் இரட்டைமதகு ஈசூப் அவர்
என்ற தகவலையும் இணைத்து சொன்னார் ''மின்னல்'']. ஆசான் மின்னல் இராதா அவர்கள் பல ஆசான்களிடம் பயின்றுள்ளார். அவர்கள்,
-நாச்சியார்கோயில் இராமலிங்கம் [இவர் பூரான்செரிப்
விளையாட்டில் சிறந்தவர்]
- மகாகுரு.ராஜா நயினார் [ஆயுதக் கலையில்
வல்லவர்]
- குழிச்சார் ஜெகதீசன்பிள்ளை [குத்துக்கலை, கட்டைக்கழியில் சிறந்தவர்]
சாமியார் கந்தசாமி செட்டியார் [மல்யுத்த ஆசான், செங்கோட்டையை சேர்ந்த இவர் அந்தமான்,சிங்கப்பூர் போன்ற
இடங்களுக்கு சென்று திரும்பியவர். பிறர் மனதில் உள்ளதை குறிப்பறிந்து சொல்லும் திறனுடையவர்]
- மதுரை துரைச்சாமி தேவர் [இவர் மல்யுத்த ஆசான்]
- ஓட்டாத்தூர் சி.கருப்பையா [முழுபிடி கம்பு
சண்டையில் ஆசான்]
- இலைக்காரர் சீனுவாசன் [சென்னிமலையைச் சேர்ந்தவர், கொள்ளைக்குச்சி விடையாட்டில் ஆசான்]
-சண்டமாருதம் சுடலைமுத்து [வில்லிபுத்தூரைச்
சேர்ந்தவர், ''பனையேறி விளையாட்டு'' எனப்படும் ஒரு சிலம்புக்கலையில்
சிறப்புடையவர்.
ஆசான் மின்னல் இராதா அவர்கள் குத்துக்கலை, ஆயுதக்கலை, மல்யுத்தம், என பல தற்காப்பு கலைகளை கற்றிருந்தாலும், சிலம்புக்கலையே தான் பேரும் புகழும்
அடைய காரணமாக இருந்தது என்றார்.
பெரும்பான்மையான
ஆசான்கள், எல்லா அடிவரிசைகளை சொல்லித் தந்தாலும், ஒருசில அடிமுறைகளுக்கு முக்கியத்துவம் தந்து அதையே அடிக்கடி கூறியும், சொல்லியும் தந்துள்ளனர். சண்டமாருதம் சுடலைமுத்து
ஆசான் அடிக்கடி கூறுவது,
''எண்சான்
உடம்புக்கு சிரசே பிரதானம்
எதிரியின் உடம்பில் 8-அய்
எழுதி, குத்துவிட்டு,தலையிலடி''
முழுபிடி கம்பு சண்டையில் சிறந்துவிளங்கிய ஆசான்
ஓட்டாத்தூர் சி.கருப்பையா அடிக்கடி சொல்லுவது,
’முனைவரிசை, கலகமுறை
தட்டு, வெட்டு, எழில்
மூனறில் ஒன்று- கண்குத்து''
இவர் பெற்ற சிறப்புகள்
''மின்னல் இராதா ''அவர்கள் போலீஸில் சேர்ந்த காலம்தொட்டே தமிழ்நாடு காவலர்களுக்காக நடத்தப்படும்
மாநில அளவிலான மல்யுத்தம் உட்பட பல உடற்திறன் போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார். 1964 - 67 வரை மல்யுத்தப் போட்டிகளில் தொடர்ந்து முதல்பரிசை பெற்று வந்துள்ளார். உயரம்
தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஆயுதமற்ற நிலையில் செய்யும் சண்டை [Unarmed
combat] போன்றவற்றிலும்கூட பல பரிசுகளை பெற்றுள்ளார். இவர்
பணியில் இருந்த காலம்வரை ஆண்டுதோறும் நடைபெறும் ''போலீஸ்படையின் வீரதீர
செயல்விளக்க காட்சியில்'' பங்கேற்று சிலம்பு மற்றும் ஆயதக்கலை போன்றவற்றை செய்துகாட்டியுள்ளார்.
ஆயுதங்களையும், சிலம்பதையும் மின்னல் வேகத்தில் சுழற்றுவதால் ''மின்னல் இராதா'' என அடைமொழியோடு பேரறிஞர் அண்ணா முன்னிலையில் ஐ.ஜி.அருள் அவர்கள் பாராட்டியதை
நினைவு கூர்ந்தார். இவர் காவலராக பணியாற்றிய கடலூர், காட்டுமன்னார்குடி, பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, புவனகிரி ஆகிய ஊர்களில் பலருக்கு சிலம்புக் கலையை போதித்துள்ளார்.
நல்ல மாணவர்கள்
கடந்த நாற்பது
ஆண்டுகளாக பலருக்கு சிலம்புக் கலையை போதித்துவந்துள்ளார். தனது மகன்கள், திரு.மதியழகன், திரு.ரவிச்சந்திரன், திரு. வேல்முருகன் அனைவருக்கும் சிலம்புக்கலையை போதித்துள்ளார் எனினும் தனது
கலையை யாருக்கும் முழுமையாக சொல்லித்தர வாய்க்கவில்லை என்கிறார். ''காரணம், அந்த அளவிற்கு தன்னை முழுமையாக கலைக்கு அர்ப்பணிக்கும் மாணவர்கள்
கிடைக்கவில்லை, சமூக அமைப்பும் அதற்கேற்றாற்போல் இல்லையே ! அத்தோடு எனது நம்பிக்கையையும் பெற
வேண்டுல்லவா'' என்றார். குறிப்பிட்டு சொல்லும்படியாக சில மாணவர்களின் பெயர்களைக் கேட்டபோது,
- சித்தலிங்கம் கோவிந்தசாமி [Inspector]
- கோலியனூர் இராமலிங்கம் [Forest officer]
- கானுர் சவுரிநாதன் [Sub-Inspector]
- விளநகர் இரவிச்சந்திரன் [''மின்னல் இராதா'' அவர்களின் புதல்வர்
ஆகியோரை குறிப்பிட்டார். ''பொதுவாக நல்ல ஆசான்களுக்கு நல்ல மாணவன் கிடைப்பதில்லை, நல்ல மாணவனுக்கோ நல்ல ஆசான் கிடைப்பதில்லை ! இது சரியாக அமைந்தாலும், சரியான சகஜோடி கிடைத்தாலதானே நன்றாக கற்றுக்கொள்ள முடியும்'' என்று தற்காப்புக் கலையின் சூழலை விளக்கினார்.
கலைக்கு சாதிப் பாகுபாடு உண்டா ?
கலையில்
சாதிப்பாகுப்பாடு காணப்படுவது குறித்து கேட்டபோது, ''உண்மைதான். இக்கலையைப்
போதிக்கும் ஆசான்கள் பெரும்பான்மோர் சாதி வித்தாசத்தோடுதான் நடந்துவந்துள்ளார்கள்
என்று கருதவேண்டியுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு இக்கலையை போதிக்கும்போது
வெறும் அலங்கார விளையாட்டை போதித்து, முக்கிய யுத்திமுறைகளை மறைத்து வந்துள்ளார்கள். அதனால்தான் இப்போதும் மேல்சாதி
ஆசான்களிடம் நுணுக்கள் நிறைந்த கலையும், தாழ்த்தப்பட்ட ஆசான்களிடம்
அலங்காரத்தனமான விளையாட்டும் காணப்படுகிறது.'' எனறு விளக்கமளித்தார்.
மேலும், ''நீங்கள் சொல்துபோல் துரோணாச்சாரிகள்
இன்றும் இருக்கிறார்கள், ஆனால் நான் அவ்வாறு
இல்லை, என்னைப் பொருத்தவரையில் கலைக்கு சாதி
இல்லை, மதமும் இல்லை'' என்று தன்னிலை விளக்கமும் தந்தார். மேலும், சில இடங்களில் மேல்சாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக் போதிக்க வேண்டாம் என
இவரிடத்தில் கேட்டுக்கொண்டதை நினைவு கூர்ந்தார்.
சிலம்புக் கலை தமிழர்களுக்குடையது தானா?
தமிழகத்தில் தற்காப்புக் கலையில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களில்
பெரும்பான்மையோர் இஸ்லாமிர்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக, பூரான் செரீப், இஸ்தெல்லா, இரட்டைமதகு ஈசூப். போன்றவர்கள். இவர்கள் பெயரிலேயே, பூரான் செரீப் விளையாட்டு, இஸ்தெல்லா விளையாட்டு
என்றெல்லாம் தமிழக முழுவதும் வழங்கப்படுகிறது. மேலும், இக்கலையில் பிறமொழி சொற்கள் நிறைய கலந்துள்ளனவே, எடுத்துக்காட்டாக, கிரிக்கி, உடான், பாவ்லா போன்ற சொற்கள் தமிழ்சொல்லாக
இல்லை. இக்கருத்துக்களை சிலர் முன்வைக்கிறார்களே, உங்கள் கருத்து என்ன என்று வினவினோம்.'' ஆசான்களில் பூரான் செரீப், இஸ்தெல்லா, இரட்டைமதகு ஈசூப் போன்றோர் பெரும்புகழ் பெற்று விளங்கியது உண்மைதான், என்றாலும் பல நாடார், நாயினார், படையாட்சி போன்ற சமூகத்தினரும் சிறந்து விளங்கியதை மறுக்க இயலாது.பூரான்
செரீப், இஸ்தெல்லா, இரட்டைமதகு ஈசூப் போன்றவர்களும் மதம் மாற்றப்பட்ட தமிழர்கள்தான். இக்கலையில்
பெரும்பான்மை சொற்கள் தமிழ்தான், சில சொற்கள் பிற
மொழியிலிருந்து ஊடுருவி விட்டன.''
மதுரை பக்கம்தான் தற்காப்புக் கலையில், குறிப்பாக சிலம்புக் கலையில் அதிக நுணுக்கம் உடையதாக அமைந்துள்ளது என்ற
கருத்து உள்ளதே'' என்று வினவினோம்.''தஞ்சை மாவட்டத்தில் தான், அதாவது சோழர்கள் ஆண்ட
பகுதியில்தான் தற்காப்புக் கலை தோன்றின. இப்பகுதியில் தான் மிகப்பெரிய ஆசான்கள்
இருந்துள்ளார்கள், இப்போதும்
இருக்கிறார்கள். குத்தும் சிலம்பும் இப்பகுதியில்தான் அதிக நுணுக்கத்துடன்
சொல்லித்தரப்படுகின்றன. மதுரைப் பகுதியில் மல்யுத்தமும், வர்மமும் அதிக அளவில் சொல்லித்தரப்படுகின்றன'' என்று விளக்கமளித்தார்.
எதிர்காலத் திட்டம்
தான் கற்றுக்கொண்ட எல்லா கலைகளையும், யுத்திமுறைகளையும் ஒருங்கிணைத்து புதிய பாடத்திட்டத்தை வகுத்துள்ளார். மேலும்
தற்போது சிலம்புக் கலை குறித்து புத்தகம் ஒன்றை எழுதிவருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் தலை சிறந்த ஆசான்களில் ஒருவரை சந்தித்தை பெருமையோடு உணர்ந்து
திரும்பினோம். இவரின் அனுபவத்தை ஆவணப்படுத்த வேண்டியது தமிழர்களின் கடமை.
[பேட்டி கண்டவர்கள் -
சி.இரா.இளங்கோவன் மற்றும் ஆ.கலைச்செல்வன், நாள்-03.06.1998. இடம்-விளநகர், நன்றி:- குரிசில் செய்திமடல், ஜூலை 1998,]
No comments:
Post a Comment