ஆசான் சங்கு சூடாமணி
உலகில் உள்ள பல கலைகளுக்கு தமிழகம்
மூல ஆதாரமாக இருந்துவந்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் பல ஆதிக்க சக்திகளினால்
திசை திருப்பப்பட்டு அழிந்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் அழிந்துகொண்டிருக்கும் பல்வேறு கலைகளை, மீண்டும் போற்றும் நோக்கத்தோடு ஆராய்ச்சியாளர்கள் நாட்டுப்புறப் பாடல், கூத்து, கும்மிப்பாட்டு, சித்தமருத்துவம் போன்றவற்றை தேடி தொகுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தற்காப்புக் கலைகளை மட்டும் யாரும் நாட்டமில்லாமல், கவனியாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். பல்வேறு தற்காப்புக்கலைகள்
கடல்கடந்து சென்று திரும்பவும் புதிய பெயருடன் இங்கு அறிமுகம் செய்யப்படும்
நிலைக்கு தாழ்ந்த நிலையில் உள்ளது.
தற்போதுள்ள நிலையில், அழிந்துக்
கொண்டிருக்கும் இக்கலையின் நுணுக்கங்களையும், செய்திகளையும் முழுமையாக திரட்டுது கடினமான பணியாகும். தமிழகத்தில் உள்ள பல
தற்காப்பு ஆசான்களைச் சந்தித்து அனைத்து செய்திகளையும் ஆவனப்படுத்த முயன்றோம்.
இதனை தேடுகிற, திரட்டுகிற பணியை மேற்கொள்ளும்போது, இதில் விடுபட்டுள்ள நுணுக்கங்களும், தொக்கிநிற்கிற செய்திகளும் முழுமையாக கிடைக்காமல் போய்விடுமோ, என்ற பயமும் வருத்தமும் தோன்றுகிறது.
தென்னார்காடு மாவட்டம், கடலூர் வட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தில் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கும் 69 வயது நிரம்பிய ''சங்கு வாத்தியார்'' என்றழைக்கப்படும் ''ஆசான் சங்கு சூடாமணி'' அவர்களை சந்தித்தோம். அவரிமிருந்து பல அரிய செய்திகள் கிடைத்தன.
இவர் ஊரில் ஏற்பட்ட சண்டைக் காரணமாக தனது 17-வது வயதில் சண்டைக் கலையாகிய ''குத்து'' கலையை கற்க கிளம்பினாராம். தனது முதல் வாத்தியார் பரங்கிப்பேட்டை சின்னக்
கடைத்தெரு ''அச்சாபக்கிரி'' என்பவராம். அக்காலத்தில் பிடி போடுவதில் தலைசிறந்த இவரிடம் ''ஒத்தை பின்னல், இரட்டைப் பின்னல், ஒத்தை தந்தி, இரட்டைத் தந்தி, ஒத்தை மல்லி, இரட்டை மல்லி, இரட்டைக் கொக்கி, உள்சாவி, வெளிசாவி, உள்கத்தரி, வெளிக்கத்தரி, என்று 64 வகையான பிடிகளை'' கற்றுக்கொண்டாராம்.
பிறகு சிதம்பரம் அருகில் உள்ள பு.முட்லூரில் உள்ள ''அமீர்'' என்பவரிடம், குத்துக் கலையில் சிறந்த ஒன்றாக கருதப்படும் ''இஸ்தெல்லா'' விளையாட்டை கற்றுக்கொண்டாராம். பின்பு
நாகப்பட்டிணம் அருகில் உள்ள திட்டைச்சேரி வடவாதிமங்கலம் சென்று ''பூரான் செரீப்'' என்பவரிடம் பயிற்சி
பெற்றுள்ளார். இவருடைய கலைக்கே ''பூரான்செரீப்'' விளையாட்டு என்று வழங்கப்படுவாக குறிப்பிட்டார். பூரான் செரீப் மைத்துனர் ''இரட்டைமதகு ஈசூப்'' என்பவரிடம் சில
வருடங்கள் சில அடிமுறைகளைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் மதுரை மாவட்டம், அம்பாள்சமுத்திரம்
பொன்னையாத் தேவர், திருநெல்வேலி தங்கவேல்
பயில்வான் ஆகியோரிடம் சென்று சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
இவர் கற்றுக்கொண்ட கலைகளிலேயே ''இஸ்தெல்லா விளையாட்டும், பூரான்செரீப்
விளையாட்டும்'' தான் சிறந்ததாம். இந்த இரண்டையும் நன்றாக
கற்றுக்கொண்டால், யாரிடம் வேண்டுமானாலும், எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் சண்டை செய்யமுடியும் என்று திட்டவட்டமாக
கூறுகிறார்.
இவர் தனது 30-வது வயதில் பல போட்டிகளில்
கலந்துக்கொண்டதாக கூறுகிறார். சிதம்பரம் டவுன்ஹால் மைதானத்தில் ''அமர்சிங் பயில்வானையும், சேலம் நேரு மைதானத்தில்
கொத்தனார் கந்தசாமி பயில்வானையும், திருநெல்வேலியில் இராசாமணி
பயில்வானையும் வென்றதாக கூறுகிறார். அக்காலத்தில் இவரை ''திக்கெட்டும் திடுக்கிடும் சங்குசூடாமணி பயில்வான்'' என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள் என்று கூறி பெருமைபடுகிறார்.
இவருக்கு மோகன் குமாரமங்கலம் நெருங்கிய நண்பராம். அக்காலத்தில் அவரின் வேண்டுகோளின்படி
சிலருக்கு பயிற்சி தந்ததாக கூறுகிறார். இவருடைய மாணவர்களில் முக்கியமானர்கள்
நடுவீரப்பட்டு எஸ்.தேவநாதன், காராமணிகுப்பம்
வித்தியாபதி, மற்றும் சென்னையில் சென்சாய்
இ.எஸ்.குமார் ஆகியோர் என்றார்.
இவரிடம் கிட்டதட்ட 30 ஆண்டுகாலமாக பயிற்சி
பெற்றுவரும் தேவநாதன் ''தமிழகத்திலேயே
பூரான்செரீப், இஸ்தெல்லா விளையாட்டை முழுமையாக தெரிந்து
வைத்துள்ளவர் இவர்தான். இவரிடம் 30 ஆண்டுகாலமாக பயிற்சி
பெற்றாலும் கலையை முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை, அந்த அளவிற்கு நிறைய நுணுக்கங்களை வைத்துள்ளார்'' என்று கூறுகிறார்.
ஆசான் சங்குசூடாமணி அவர்களுக்கு
பயிற்சியளித்த ஆசான்களைப் பற்றி, அவரே அளித்த தகவல்களின்
அடிப்படையில் தொகுத்த செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம்.
இஸ்தெல்லா:- இவரின் குத்துக் கலைக்கு ''இஸ்தெல்லா விளையாட்டு'' என்று பெயர். இவரை ''அமீது'' என்று அழைப்பார்கள். சிதம்பரம் அருகிலுள்ள பு.முட்லூர் கிராமத்தைச்
சேர்ந்தவர். இவரின் விளையாட்டு மிகுந்த கட்டுமானங்களைக் கொண்டது. மொத்தம் பத்து
அடிமுறைகளைக் கொண்டது. கையை மூடிக் குத்தும் முறைகளும், எதிரியிடம் நெருங்கி விளையாடும் நுணுக்கங்களையும் கொண்டது. இவர்
வெளிநாடுகளைக்கு சென்று இக்கலையை சொல்லிக் கொடுத்ததாக அறியப்படுகிறது.
பூரான்செரீப்:- இவருடைய கலைக்கு ''பூரான்செரீப்
விளையாட்டு'' என்று பெயர். இக்கலை எதிரியை
நெருங்கவிடாமல் தாக்குவது இவரின் விளையாட்டு. இது ''ராஜா விளையாட்டு'' என்று சிறப்பாக
பாராட்டப்படுகிறது. கையை திறந்த நிலையில் வைத்து, குறிப்பாக புறங்கை அடிகள் நிறைந்தது. இவரின் விளையாட்டில் கைக்கு தான்
அதிகவேலை. இவருடைய மகன் ''முஸ்தபா'' தற்போது இக்கலையை சொல்லிக் கொடுப்பதாக தெரிகிறது. இவர் சிங்கப்பூர் சென்று
பயிற்சி அளித்ததாக அறியப்படுகிறது.
தமிழக குத்துக்கலை ''இஸ்தெல்லா விளையாட்டு' மற்றும் ''பூரான்செரீப் விளையாட்டு'' என இரண்டு பெரும் பிரிவாக சிறப்புபெற்று விளங்குவதை அறியமுடிகிறது.
இரட்டைமதகு ஈசூப்:- இவர் பூரான் செரீப் மைத்துனர். இவருடைய விளையாட்டில் கால் அடிகள் நிறைய
உண்டு. இவர் காலால் இரண்டு மதகுகளை ஒரே அடியில் உதைத்து உடைத்ததால் சிறப்புப்
பெயராக ''இரட்டைமதகு ஈசூப்'' என்று அழைக்கப்படுகிறார்.
அச்சாபக்கிரி:- இவர் பரங்கிப்பேட்டை சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர். தமிழத்தில் உள்ள 64 பிடிகளுக்கும் இவர்தான் வாத்தியார். அக்காலத்தில் பிடிபோடுவதில் இவருக்கு
நிகராக யாரும் இல்லை என புகழப்படுகிறார். இவருடைய விளையாட்டு ''காட்டா குஸ்தி, போட்டா போட்டி'' என்று அழைக்கப்படுகிறது.
[பேட்டி கண்டவர்கள் :- சி.இரா.இளங்கோவன்
மற்றும் வே.மணிவாசகன். நாள்:- மே.1987. நன்றி:-''தூரிகை'' ஜூலை.1987]
No comments:
Post a Comment