Thursday, 2 May 2013

ஆசான். மஞ்சக்கொல்லை இரத்தினசாமி



ஆசான். மஞ்சக்கொல்லை இரத்தினசாமி

                கடலூர் மாவட்டம்,சிதம்பரம் வட்டத்தில் உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் தற்காப்புக்கலை ஆசான் இரத்தினசாமி [81] அவர்களை சென்ற 09.07.1999 அன்று சந்தித்தோம். ஆசான் அவர்களை பேட்டி கண்டபோது நிறைய செய்திகள் கிடைத்தன.

                மஞ்சக்கொல்லை நடராஜ படையாட்சி மகனான இரத்தினாமி தனது 20-வது வயதில் இக்கலையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெறத் தொடங்கினார். ஆசான் குடிகாடு .அய்யாடி படையாட்சி அவர்கள் சாத்தங்குப்பத்தில் பள்ளிக்கூடம் நடத்தியபோது அதில் சேர்ந்து,  கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் பயிற்சி பெற்றார். மேலும் எல்லைக் குடியில் பள்ளிக்கூடம் நடத்திய ஆசான் நெல்லிக்குப்பம் பழநிசாமி நாடார் அவர்களிடம் பயிற்சி பெற்றார்.




ரென்ஷி. இ.எஸ்.குமார் அவர்களுடன் ஆசான் இரத்தினசாமி அவர்கள்


                குத்துவரிசை, சிலம்பம், அரைக்கழி விளையாட்டு, தீப்பந்தம், அடைவு, பிடிகள் போன்றவற்றை நன்கு கற்றுக்கொண்ட ஆசான் இரத்தினசாமி அவர்கள், புதுப்பாளையம்[காடாம்புலியூர்], சிறுதொண்டமாதேவி[பண்ருட்டி], மஞ்சக்கொல்லை ஆகிய ஊர்களில் பள்ளிக்கூடம் நடத்தினார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகாலம் தொடர்ந்து வகுப்பு நடத்தினார்.ஆனால் பள்ளிக்கூடம் நடத்துவது நல்ல வருமனத்திற்கு உரியதாக இல்லாததாலும், திருமணத்திற்கு பிறகு வருமானம் அதிகம் தேவைப்பட்டதாலும், பள்ளிக்கூடம் நடத்துவதை தனது 30-வது வயதில் நிறுத்திவிட்டு தீவிர விவசாயத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.  இவரிடம் பயின்ற ஆசான் பழனி தொடர்ந்து வகுப்பு நடத்திவந்ததாக தெரிவித்தார்.

                இவர் காலத்தில் தற்காப்புக் கலையில் புகழ்பெற்று விளங்கிய, அதிக இடங்களில் பள்ளிக்கூடம் நடத்தியவர் ஆசான்.சேராக்குப்பம் தம்புசாமி. இவர், அக்காலத்தில் இக்கலையில் மிகச்சிறந்து விளங்கிய ஆசான் நத்தமலை அய்யாதுரையின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சாத்தங்குப்பத்தில், தனது மாணவர்களுக்கு நடத்திய அரங்கேற்ற விழாவில், தனக்கு அணிவித்த மாலையை இவருக்கு [ஆசான் இரத்தினசாமி] போட்டு சிறப்பு செய்ததை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

                இவர்களிடம் பிடிகள் பற்றிகேட்ட போது,''அறுபத்துநான்கு பிடிகள் இருக்கின்றன என்பார்கள். ஆனால் சரியான பிடிகள் என்பவை இருபதிலிருந்து இருபத்தைந்து தான் இருக்கும்  ''மற்றவை எல்லாம் போட்டால் எளிதில்.தப்பிவிடலாம்'' என்றார். மேலும் ''குச்சியிலும் பிடிகள் போடலாம், ஆனால் சண்டை செய்யும்போது அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்காது''என்றார்.

                இவருடைய இக்கருத்தைப் பற்றி கடலூர் ஷிட்டோரியோ கராத்தே கலையின் மூத்த பயிற்சியாளரும், தமிழக தற்காப்புக் கலை ஆசானுமாகிய வித்தியாபதி ''மிகுந்த அனுபவம் மிக்கவரே இவ்வாறு பகுத்து கூறமுடியும், இவரை சந்தித்து பல யுத்திகளை கற்கவேண்டும்''என்றார்.

                கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்ற கோயில் திருவிழா, திருமண ஊர்வலம் போன்றவற்றில் குறிப்பாக மிராளூர், மஞ்சக்கொல்லை, முத்தாண்டிக்குப்பம், வல்லம், மருங்கூர், பெரும்புத்தூர், நெய்வேலி ஆகிய ஊர்களில் தனது குழுவினருடன் சென்று குத்து, சிலம்பு ஆகியவற்றை செய்து காட்டியதாக தெரிவித்தார். இவ்வாறு பொது இடங்களில் தற்காப்புக் கலைகளைச் செய்துக் காண்பிக்கும் போது, மற்ற ஆசான்களிடம் பயிற்சி பெற்றவர்கள் யுத்திமுறைகளை விமர்சித்து போட்டிக்கு அழைப்பது வழக்கம். பெருமாத்தூரில்  நடந்த ஒரு திருமண ஊர்வலத்தில் இவ்வாறு நடந்தப் போட்டியில் தனது மாணவர்கள் வெற்றிப் பெற்றதை நினைவுக் கூர்ந்தார். வகுப்பு எடுப்பதையும், பயிற்சி செய்வதையும் விட்டு ஐம்பது ஆண்டுகள் மேலாகியும் இப்போது செய்துகாட்டுவதற்கு தயாராகவும் இருந்தார். தற்போது எண்பத்தோரு வயதில் உள்ள ஆசான் அவர்கள், வரும் ஊர்த் திருவிழாவில் களத்தில் இறங்கி கடைசியாக ஒருமுறை இக்கலையை செய்துக்காட்டப் போவதாக தெரிவித்தார். இவரை இரண்டாண்டுக்கு முன்பு [1997, ஜூலை] ஒருமுறை என் மாணவர்களோடு சந்தித்தோம். அப்போது அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்று எங்களுக்கு சில யுத்திமுறைகளை செய்துக் காண்பித்தார். தற்போது மிகவும்  தளர்ந்த நிலையில் காணப்பட்டார். இவரின் யுத்திமுறைகளை ஒளிநாடாவில் பதிவுசெய்ய வேண்டும் என திட்டத்தோடு அவரிடமிருந்து விடைபெற்றோம்.

[பேட்டி நாள்.-9.07.1999, பேட்டி கண்டவர்கள் - சென்சாய். சி.இரா.இளங்கோவன் மற்றும் ஆ.கலைச்செல்வன், நன்றி-குரிசில் செய்திமடல், செப்.1999]

No comments:

Post a Comment