வர்ம ஆசான் பேத்தரசன்
கடலூரில்
வசிக்கும் வர்ம ஆசான் ஏ.எஸ். பேத்தரசன் [75] அவர்களை ''குரிசில்'' இதழில் வெளிவரும்
''தமிழகத்தில்
தற்காப்புக்கலை'' தொடருக்காக 15.09.1987 அன்று
சந்தித்தேன்.
ஆசான் பேத்தரசன்
அவர்களின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இராணுவத்தில்
இருந்தவர். அதில் விளையாட்டுப் பிரிவில் இருந்ததால், பல நாடுகளுக்கு
சென்று குத்து சண்டைப் போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார். இவர் ஈரான், ஈராக், எகிப்து, இத்தாலி, கிரீஸ் போன்ற
நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார். எகிப்து இஸ்மாலியாவில் நடந்த குத்துச் சண்டை
போட்டியில் வெற்றி பெற்றதையும், பஞ்சாபில் நடந்த
போட்டிலும், தனது சொந்த ஊரில்
பல குஸ்தி வாத்தியார்களோடும் சண்டையிட்டு வெற்றி பெற்றதையும் நினைவு கூர்ந்தார்.
இவர்
சுதந்திரத்திற்கு முன்பே படையில் இருந்து ஓய்வுபெற்று, கடலூரில்
குடியேறிவிட்டதாக கூறினார். இப்போது குறிப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு மட்டும்
பயிற்சி தந்துக்கொண்டிருக்கிறார்.
ஆசான் பேத்தரசன்
அவர்கள் வர்மம், குஸ்தி, குத்துச்சண்டை, ராப்காட்
[தற்காப்புகலை], வர்ம வைத்தியம் போன்ற கலைகளை கற்றுள்ளார். இவருடைய ஆசான், பாஞ்சாலங்குறிச்சி
வர்ம ஆசான் குப்பண்ணன் அவர்கள். ஆசான் பேத்தரசன் அவர்கள் தனது ஆசானைப் பற்றி ''அவருக்கு தெரியாத
கலைகள் எதுவுமில்லை, இவருக்கு தெரிந்த கலைகள் எல்லாற்றையும்
தெரிந்தவர்கள் யாருமில்லை, அவர் சகலகலா வல்லவர்'' என்று பெருமைப்பட
கூறுகிறார்.
ஆசான் பேத்தரசன்
அவர்கள் தான் கற்றுவைத்துள்ள கலைகள் எல்லாற்றையும் பிரித்து வகைப்படுத்தி வைத்திருக்கிறார்.
கழி விளையாட்டு என்பது ''இரண்டு சுற்று, ஒரு குத்து'' என்று கூறி
விளக்குகிறார். ''குச்சி விளையாடும் போது, குச்சிப்படுகிற
தூரத்திலிருந்து ஒரு அடி பின்னால் சென்றுவிட்டால் எளிதில் தப்பித்துவிடலாம்.
இரண்டு அடி உள்ளுக்கு வந்துவிட்டால் எளிதாக குச்சியைப் பிடித்துவிடலாம்.'' என்று
கூறுகிறார். தலையடியையும், அறப்பையும் உள்ளுக்கு வந்து பிடித்துக்
காட்டினார்.
''இவர் பலவித
உடற்பயிற்சிகளைச் சொல்லித் தருகிறார். குறிப்பாக அனுமந்தா பஸ்கி, போஸ்ட் எக்ஸசைஸ்
[ pole raising ] சிறப்பானவை, மேலும் தண்ணீரில்
செய்யக் கூடிய உடற்பயிற்சிகள் மிகவும் சிறப்பானவை'' என்று இவரிடம்
பயின்றுவரும் திரு.வித்தியாபதி அவர்கள் தெரிவித்தார்.
ராப்காட்:- ஆசான் பேத்தரசன் அவர்கள் ''ராப்காட்'' என்ற
தற்காப்புக்கலை ஒன்றை கற்றுவைத்துள்ளார். இது ஒன்பது அடிமுறைகளைக் கொண்டது என்றும், எதிரி எவ்வளவு
வேகமாக வந்து தாக்கினாலும், மிக சுலபமாக ஒதுங்கி அதே வேகத்தில் எதிரியை
தாக்கும் முறைகள் நிறைந்தது என்றும் கூறுகிறார். எவ்வளவு பெரிய பலசாலியான
எதிரிகளைக்கூட ராப்காட் மூலம் மூலம் எளிதில் சமாளித்துவிடலாம் என்கிறார்.
வர்மம் :- மர்மம் என்பது மருவி வர்மம் என்றாகிவிட்டது என்றும், ''வர்மம் அடித்தால்
கர்மம், எடுத்தால் தர்மம்'' என்றும்
கூறுகிறார். ''வர்மம் மொத்தம் 36 தான், அவை உடலில்
மூன்று பிரிவுகளில், பிரிவுக்கு 12- ஆக அமைந்துள்ளன'' என்று
விளக்கமளிக்கிறார். தான் அகஸ்தியருடைய வர்மானிய முறைகளைப் பின்பற்றுதாக
தெரிவிக்கிறார். இவர் தன் மாணவர்களுக்கு குஸ்தி, குச்சி, ராப்காட், குத்து, வைத்தியம்
போன்றவற்றை சொல்லித் தந்துவிட்டு கடைசியாகத்தான் வர்மத்தை சொல்லித்தருவதாக
தெரிவிக்கிறார்.
வைத்தியம் :- இவர் தற்காப்புக்கலை தொடர்பான எலும்பு முறிவு, சுளுக்கு, பிடிப்பு
ஆகியவற்றிற்கு வைத்தியம் செய்கிறார். ‘‘சித்த வைத்தியத்தில் மூன்று பிரிவுகள் உண்டு. அவை, இரண வைத்தியம், இராட்ஸச
வைத்தியம், இராஜ வைத்தியம். இதில் தற்காப்புக்கலை பயில்வோர் இராட்ஸச
வைத்தியம் கற்று வைத்திருக்க வேண்டும்'' என்றார்.
அருக்கன் :- ''தற்காப்புக்கலை பயில்வோர் ''அருக்கன்''பற்றி
தெரிந்திருக்க வேண்டும். அருக்கன் என்பது நாள், கிழமை, நேரத்துக்கு
தக்கபடி மாறும். எதிரியைத் தாக்கும்போது அருக்கன் இருக்கும் திசையை அறிந்து அந்த
திசையிலிருந்து எதிரியைத் தாக்கினால், எதிரி எவ்வளவு
பலம் பெற்றவனாக இருந்தாலும் அவனை வென்றுவிடலாம்'' என்று நம்ப
முடியாத கருத்தை கொண்டிருக்கிறார். மேலும், சாமுத்திகா
இலட்சணம் மூலம் எதிரியைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்றும் நம்பிக்கை
கொண்டுள்ளார்.
[பேட்டி :- சி.இரா.இளங்கோவன், நாள்- 15.09.1987,
நன்றி:- ''தூரிகை'' அக்டோபர் 1987.]
No comments:
Post a Comment