Saturday, 4 May 2013

ஆசான் நத்தமலை கதிர்வேல்



ஆசான் நத்தமலை கதிர்வேல்

                கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம் லால்பேட்டை அருகில் வீராணம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது நத்தமலை எனும் கிராமம். இவ்வூரில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சிலம்பக் கலையை கற்றுவைத்துள்ளனர். இப்படியோர் சிறப்பை பெற்றுள்ள கிராமம் தமிழகத்திலேயே இதுவாகத்தான் இருக்கமுடியும். இதற்கு காரணம் சென்ற தலைமுறையில் வாழ்ந்த ஆசான் அய்யாதுரை மற்றும் ஆசான் ஆறுமுகம் ஆகியோரும், இப்போது பயிற்சியளித்துவரும் ஆசான் கதிர்வேல்[56] மற்றும் ஆசான் சக்கரவர்த்தி[53] ஆகியோருமாவர்.

                ஆசான் கதிர்வேல் அவர்களை 07.07.98 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவர் அளித்த பேட்டியிலிருந்து கிடைத்த செய்திகள்:-
                பல ஆசான்ளிடம் பயின்றவர்களே சிறந்த ஆசானாக வளர்ச்சி பெறமுடியும் என்பதற்கு ஏற்ப இவர் தனது 14-வது வயதில் தொடங்கி பல ஆசான்களிடம் தற்காப்புக் கலையைப் பயின்றுள்ளார். தான் பயின்ற ஆசான்களைப் பற்றிய சில தகவல்களை தெரிவித்தார். அவர்கள்,

1. ஆசான் நத்தமலை அய்யாதுரை
                இம்மாவட்த்தில் குறிப்பிடத்தக்க ஆசான்களில் நத்தமலை அய்யாதுரையும் முக்கியமானவர். இவர் பல இடங்களில் வகுப்பு நடத்தியுள்ளார். ஆத்துக்குறிச்சி என்ற ஊரில் தனது அந்திய காலத்தில் தங்கியிருந்தார், சென்ற ஜூன் மாதம்தான் காலமாகிவிட்டார் என்று ஆசான் கதிர்வேல் தெரிவித்தார். இவரிடம் குத்துக்கலையை [இஸ்தெல்லா விளையாட்டை] கற்றுக்கொண்டார் .ஆசான் நத்தமலை அய்யாதுரையும், ஆசான் சேராக்குப்பம் தம்புசாமியும் சமகாலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஆசான் நத்தமலை ஆறுமுக வாத்தியார்
                இவரிடம் சிலம்பக் கலையையும், கட்டைக்கழி விளையாட்டையும் [12 பாடங்களைக் கொண்டது] கற்றுக்கொண்டார்.
3. முடிகண்ட நல்லூர் ஆறுமுக வாத்தியார்
                இவரிடம் குத்த மற்றும் சிலம்பக் கலையைப் பயின்றார்.
4. ஆசான் செங்கமேடு சின்னப்படையாட்சி
                சீர்காழி அருகில் உள்ளது செங்கமேடு கிராமம். இவர் ஆசான் பொறையார் பரமசிவநாடார் அவர்களின் தலைசிறந்த மாணவர். இவரிடம் குந்தா, மாஞ்சா [கழி] போன்றவற்றை பயின்றார்.
               
                ஆசான் நத்தமலை கதிர்வேல் அவர்கள் குத்து விளையாட்டையும் சொல்லித் தந்தாலும் சிலம்பு விளையாட்டு மூலமே புகழ்பெற்றார். ஊரில் சிலம்ப வாத்தியார் என்றே அழைக்கப்படுகிறார். இவரின் சிலம்ப விளையாட்டை ''மாஞ்சா'' என குறிப்பிடுகிறார். இது சிலம்ப விளையாட்டின் வகையான துளுக்கானம் கலந்த கதம்ப விளையாட்டு என விளக்கமளித்தார். நத்தமலையில் மட்டுமே வகுப்பு நடத்திவரும் இவர், இதுவரை ஏழுமுறை அரங்கேற்றம் நடத்தியுள்ளதாக தெரிவித்தார். வெற்றிலை பயிரிடுவதால் தொடர்ந்து விவசாயவேலை இருப்பதனால் வெளியூர்களுக்கு சென்று வகுப்புகள் நடத்த இயலவில்லை என்றார். இவரின் தம்பி, ஆசான் சக்கரவர்த்தி வெளியூர்களுக்கு சென்று வகுப்புகள் நடத்தியுள்ளார். ஊரில் உள்ள அனைவரும் பயிற்சி பெற்றிருந்தாலும், இவரின் தம்பி மட்டுமே ஆசானாக வகுப்பு நடத்துகிறார். இவரிடம் சிறப்பாக பயிற்சி பெற்றவர்களாக 1.கோபாலகிருஷ்ணன், 2.சக்கரவர்த்தி, 3.மணவாளன், 4.பன்னீர், 5.சிவனேசன், 6.கணபதி, 7.சின்னகுஞ்சு ஆகியோரைக் குறிப்பிடுகிறார். இவருடைய மகன்கள் கோவிந்தராசு, சந்திரகாசு, காமராசு உட்பட ஊரில் உள்ள இளைஞர்களும் இவரிடம் பயின்று வருகின்றனர். இவர் சாதி வேறுபாடுகள் பாராமல் அனைவருக்குமே பாடங்களை நடத்துகிறார்.

பாடதிட்டமும் போதிக்கும் முறையும்

                இவரின் படம் அரைமணி நேரம் சிலம்பும், அரைமணி நேரம் குத்தும் கொண்டதாக இருக்கும் என்றார். முதலில் யுத்தி முறைகளை போதித்துவிட்டு, பிறகு மறியல் பாடங்களை [இருவர் சண்டை செய்வது] நடத்துவதாக தெரிவித்தார். குத்து 12 பாடமும், சிலம்பு 12 பாடமும் கொண்டது இவரது பாடதிட்டம். சிலம்புக்குரிய 12 பாடங்களில் பல உட்பிரிவுகள் உள்ளன,
                - பாடம் 2-யில் மட்டும் 12-உட்பிரிவுகள்
                - பாடம் 3-யில் 9 உட்பிரிவுகள்
                - பாடம் 4-யில் 7 உட்பிரிவுகள்
                - பாடம் 5-யில் 4 உட்பிரிவுகள்
                - பாடம் 6-யில் 3 உட்பிரிவுகள்
                - பாடம் 7-யில் 5 உட்பிரிவுகள்
                - பாடம் 8-யில் 2 உட்பிரிவுகள்
                - பாடம் 9-யில் 3 உட்பிரிவுகள்
                - பாடம் 10,11,12-யில் கோர்வை பாடங்கள்
               
                                ''ஒழுக்கமும், மரியாதையும் இந்த தொழிலுக்கு அவசியம், இவை இல்லாதவருக்கு இக்கலையைக் கற்றுத்தருவதிலலை'' எனறார். மாணவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். ''பீடி, சிகரெட், மது போன்ற பழக்கங்கள் அறவே இருக்ககூடாது. சினிமா பார்ப்பது உடலுக்கு தீங்கு. அதனால் பயிற்சி முடியும்வரை மாணவர்களை சினிமா பார்க்க அனுமதிப்பதில்லை'' என்று வகுப்பு விதிமுறைகளை தெரிவித்தார்.

                அரிய தகவல்களை தெரிவித்த ஆசான் நத்தமலை கதிர்வேல் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு எங்கள் வகுப்பிற்கு வருகைதரவேண்டும் என்று வேண்டுகோளை வைத்துதிரும்பினோம். [ பேட்டி கண்டவர்கள் -சி.இரா.இளங்கோவன் மற்றும் ஆ.கலைச்செல்வன், நாள்-07.07.1998. இடம்- நத்தமலை, நன்றி:- குரிசில் செய்திமடல், செப்டம்பர் 1998,]

No comments:

Post a Comment