ஆசான் வித்தியாபதி
கடலூர் பண்ருட்டி நெடுஞ்சாலையில்
உள்ள காராமணிக்குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த ஆசான் வித்தியாபதி [51] அவர்களின் பெற்றோர் திரு.வைத்திலிங்க நயினார் - மங்கையர்க்கரசி ஆவர். இவர்
துணைவியார் திருமதி.கிரிஜா. இவர்களுக்கு அண்ணாதுரை, சிவக்குமார் ஆகிய இருமகன்களும், ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர்.
ஆசான் வித்தியாபதி அவர்களை ''குரிசில்'' இதழுக்காக 03.10.1998 அன்று சந்தித்தோம். மல்யுத்தம், குத்து, சிலம்பம், கராத்தே ஆகிய கலைகளைக் கற்றுத் தேர்ந்த
ஆசான் வித்தியாபதி அவர்களுக்கு, அவரது தந்தையின் கர்லா
கட்டை சுற்றும் பழக்கம்தான் தூண்டுகோலாக அமைந்தது என நினைவுகூர்ந்த அவர், தனது 13-வது வயதிலேயே கர்லா சுற்றும் பயிற்சியை
தொடங்கியுள்ளார்.
இவரது 15-வது வயதில், திருவாரூரிலிருந்து தியாகாஜன் என்பவர் ஏதோ சில காரணங்களுக்காக காராமணிக்குப்பத்தில்
வந்து தங்கினார். இவர் திருவாரூரில் புகழ்பெற்று விளங்கிய ஆசான் தியாகராஜன்
அவர்களின் மாணவர் ஆவார். [மாணவரின் பெயரும் தியாகாஜன்]. அவரிடம் கத்திரிபிடி போடுதல், வீச்சரிவாளைப் பயன்படுத்துதல் ஆகிய கலைகளைக் கற்றார். பிறகு ‘’திக்கெட்டும் திடுக்கிடும் சங்குசூடாமணி’’ அவர்களின் பிரதமசீடர் இராமானுசம் அவர்களிடம்
மல்யுத்தம், குத்துப்பாடம், குத்துக்கோர்வை ஆகியவற்றை பயின்றார். இவ்விதமாக சீடரிடம் கற்றபின் ஆசான் சங்குசூடாமணி அவர்களிடமே நேரில் சென்றார். அவர்
வித்தியாபதி அவர்களையும், நெல்லிக்குப்பம்
வேலாயுதம் அவர்களையும் மாணவர்களாக ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் உள்ள குத்துக்கலை
இருபெரும் பிரிவாக உள்ளது, அவை பூரான்செரீப்
விளையாட்டு, மற்றும் இஸ்தெல்லா விளையாட்டு.
இரண்டிலும் சிறந்து விளங்கியவர் ஆசான் சங்குசூடாமணி. அவரிடம் இரண்டையும்
கற்றுக்கொண்டதோடு, துக்கடா எனப்படும் 'பிறர் அடிக்கும் போதே திருப்பி அடித்தல்'' முறைகளையும் கற்றுக்கொண்டார்.
ஆசான் வித்தியாபதி
தனது ஆசான் சங்குசூடாமணி பற்றி பல அரியத் தகவல்களை
தெரிவித்தார்.
ஆசான் சங்குசூடாமணி அவர்களின் சொந்த ஊர் நடுவீரப்பட்டு அருகிலுள்ள வான்ராசு
குப்பம். மிகவும் வசதியான குடும்பம், ஆனால் அவர் தனது சொத்துக்களை எல்லாம் இக்கலையை கற்றுக்கொள்வதற்காகவே
செலவழித்தார். தாமிரபரணி, திருநெல்வேலி
பகுதிகளுக்கு சென்று தங்கி குத்துக் கலையை பயின்றார். ஆசான்கள் சேராகுப்பம் தம்புசாமி, நத்தமலை அய்யாதுரை, பரங்கிப்பேட்டை
அச்சாபக்கிரி, முட்லூர் அமீது போன்றவர்களிடம் சென்று
பயின்றார். நிறைய ஆசான்களிடம் பயின்று கலைப்பொக்கிஷமாக சங்குசூடாமணி திகழ்ந்தார்.
சங்குசூடாமணி அவர்களிடமிருந்து முழுமையாக குத்துக்கலையை பயின்ற வித்தியாபதி
அவர்கள் சிலம்புக்கலையிலும் கைத்தேர்ந்து விளங்குகிறார். தனக்கு சிலம்புக்கலையை
போதித்த ஆசியர்களை நினைவுகூர்ந்தார். அவர்கள், 1. சிவபுரி சாமியார், 2.ஆசான் பேத்தரசன், 3.மானடிக்குப்பம் மாயவேல், 4.பண்ருட்டி முகமதுஅலி, 5.திருச்சி பாலக்கரை சிங்காரம், 6. பரங்கிப்பேட்டை ஆறுமுகம் ஆகியோர் ஆவர்.
முந்தைய தலைமுறை ஆசான்கள் பலர் இன்றில்லை. பல
ஆசான்களிடமிருந்து பெற்ற கலைநுண்கங்களை இவர் தொகுத்து வைத்துள்ளார். அழிந்துக்
கொண்டிருக்கும் தமிழக தற்காப்புக் கலையின் மிச்சங்களை இவரிடமிருந்து ஆவணப்படுத்தி
பாதுகாக்க வேண்டும் என எண்ணினோம். இவரிடமிருந்து பெற்ற தகவல்களை இங்கே தொகுத்து வழங்கிறோம்,
பாடதிட்டம் :- ‘’ஒருவர் சிலம்புக்கலையை
கற்க வந்தால் முதலில் கால்மானம் கற்றுத் தருவார்கள். இதில் நிற்கும்நிலை
நேர்கோட்டில் வரும். பின்னங்கால் இறுக்கியும், முன்னக்கால் உள்வாங்கியும் இருக்க வேண்டும். கால்மானத்தில், ஒற்றைக்கால், 2-ல் ஏறுதல், மறியல் 3-ல் ஏறுதல், மறியல் 4, சறுக்கு ஒண்டி, உடான், பின்னல் இறுக்கி, பிறள், உள்நாலு, வெளிநாலு ஆகியவை கற்றுத்தரப்படும். கால்மானம்
கற்றபின்னே கழியை கொடுத்து சுற்றச் சொல்லுவார்கள். கழி காலில் படாமல்
சுற்றவேண்டும். அதன்பின்பே பாடத்தை தொடங்குவார்கள்.’’
ஆசான் பரங்கிப்பேட்டை ஆறுமுகம் அவர்களிடம் கால்மானம் வட்டமிட்டு செய்வதைக்
கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். அக்காலத்தில், விளநகர் மின்னல் இராதாவும், அவர் தம்பி ஆசான் சுப்பரமணியமும் இதில் வல்லவர் எனவும் கூறினார். ஆசான்
வித்தியாபதி, கள்ளப்பத்து, படைவிரட்டு, நாகம்பதினாறு, சந்தனப்போத்து ஆகியவற்றை கற்றுத்தேறியுள்ளார்.
கள்ளப்பத்து ;- இதில் அடிவரும் முறை தெரியாது. அடித்தால்
அடிபிறக்கும். அதாவது ''நீ என்னை அடித்தால் உன்னை இந்த இடத்தில் அடிப்பேன்'' என்பதாக அமையும்.
படைவிரட்டு :- இது கும்பலாக தாக்க வருபவர்களைத்
தடுக்கும் விளையாட்டாகும். இதனை ஆசான் சிவபுரி சாமியாரிடம் கற்றுக்கொண்டதாக
கூறினார். இவ்விளையாட்டில் சிலம்பக் கழியின் மறுமுனையில் கூர்மையான பாலாகத்தி
இணைக்கப்பட்டிருக்கும். அது பாஷாணம் தோய்த்த கத்தியாகும். கத்தி உடலில் பட்டால்
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். கழியினைச் சழற்றி, பின் எதிர்திசையில் சுழற்றி விளையாடுவார்கள்.
நாகம்பதினாறு :- இது வீச்சு பாடமாகும்.
சந்தனப்போத்து :- சிலம்ப விளையாட்டை நன்கு தெரிந்த நிலையில் இக்கலையை திருச்சி பாலக்கரை
சிங்காரம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக கூறினார்.
மடை திறந்த வெள்ளம்போல் தற்காப்புக்கலை குறித்து
நிறைய தகவல்களை கொட்டினார். இதோ, அவை,
''ஜாதிப்பிள்ளை என்பவர்கள்
காராமணிகுப்பத்தில் வந்து தங்குவார்கள். அவர்கள் சிலம்பு விளையாட்டை நன்கு
விளையாடுவார்கள்.''
''கயிற்றையே கழிபோல சுற்றுகிற
வாத்தியார்கள் தமிழகத்தில் இருந்துள்ளார்கள். அவர்களில் சிவபுரி சாமியாரின்
ஆசானாகிய ஜெயக்கொடி நாடார் முக்கியமானவர். மேலும், சிலம்பத்தில் ஒரு நிலை எடுக்கும்போது, சிலம்பக் கழியால் சிலர் தங்கள் உடம்பையே மறைப்பார்கள்.''
''காலி கட்டுதல் என்பது எதிரியைத் தடுக்கும் ஒரு முறையாகும். உதாரணமாக, ஒரு எலியை நாம் விரட்டும்போது, எல்லா இடங்களும்
அடைபட்டுள்ள நிலையில் ஒரே ஒரு இடத்தில் துளை இருந்தால் அதன் வழியாகத் தப்பிக்க
ஓடும். அப்போது அதை எளிதில் பிடித்துவிடலாம். அதுபோல், சிலம்பத்தில் துரப்பணம் என்பது ஒரு இடத்தில் மட்டும் உடம்பை திறந்து வைத்தால், எதிரி அதில் தாக்க வருவார். அப்போது திடீரென திறப்பை மூடி எதிரியைத்
தாக்குவதாகும்.''
''அரைப்பாணம் என்பது சிலம்பக் கழியை இரு கைகளினிலும் பிடித்த நிலையில் இடைவெளி 1/2 அடி இருக்கும். இரு கைப்பிடிக்கு வெளியில் இருபுறமும் கழியின் நீளம் 13/4 அடி இருக்கும்.''
''பொடிக்குச்சி என்பது 2 1/2 அடி நீளமுள்ள கழியாகும். இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு விளையாட வேண்டும்.
இதில் கத்திரிபிடி போடலாம். இக்கலையில் பெரிய ஆசான் நெல்லிக்குப்பம் பக்கிரி
ஆவார்.''
ஆஸ் விளையாட்டை ''அசைந்தால் ஆயிரம் அடி ஆஸ்விளையாட்டு'' என்று சிறப்பித்துக் கூறுவர். அதிக நிலைகள் கொண்ட இவ்விளையாட்டில் அசைந்தால்
ஆயிரம் அடிகள் கிடைக்குமென்பார்கள். இதில் மிகச் சிறந்த ஆசான் சீர்காழி திருமுத்து
ஆசாரி.
''சிலம்பக் கலையினை எந்த வயதிலும்
கற்கலாம். இது மாவட்டத்திற்கொரு விளையாட்டாகவும், ஜாதிகொரு விளையாட்டாகவும் உள்ளது. இதற்கு உதாரணமாக, கள்ளப்பத்து, குறவஞ்சி, துலுக்காணம், செட்டியார் வரிசை ஆகியவற்றை கூறலாம்.
சோழமன்னர்களும், பாண்டிய மன்னர்களும் இக்கலையை வளர்த்ததன்
விளைவாக தென்மாவட்டங்களில் சிறப்பாக உள்ளது. இராமநாதபுரத்தில் வர்மக்கலை
சிறப்புடன் உள்ளது. வர்மக்கலை பயில்பவர்கள் சட்டை அணியமாட்டார்கள். அவர்கள் உடலில்
ஐந்து இடங்களில் துணிகளைக் கட்டியிருப்பார்கள்.''
''வெளி மாநிலங்களில் குஸ்திதான்
செய்வார்கள். குத்து, சிலம்பு கற்றுக்கொள்ள
தமிழக ஆசான்களிடம் தான் செல்லவேண்டும். கேரளாவில் ''களரி''யில் சிலம்ப விளையாட்டு செய்கிறார்கள்.
ஆந்திராவில் சிலம்ப வரிசை தனியாக உள்ளது.''
தற்காப்பு பயிற்சி மேற்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய
உணவு முறைகள் பற்றி கேட்டபோது,
''ஊறவைத்த கொண்டைக் கடலையை வெறும்
வயிற்றில் சாப்பிட வேண்டும். அதனுடன் கொத்தமல்லி கீரையை சேர்த்து சாப்பிடலாம்.
இதனால் இரத்தம் சுத்தமாகி சக்தி கிடைக்கும். சூரிய உதயத்திற்கு முன்பாக யானை
நெருஞ்சி இலையை சாப்பிடவேண்டும். இது அதிக சக்தியைக் கொடுக்கும். மேலும் பச்சை
முட்டையை நன்றாக குலுக்கி பயிற்சியை ஆரம்பிக்கும் முன்பாக குடிக்கலாம். அதேபோல்
முட்டையை நன்கு குலுக்கி கொதிக்க வைத்த பாலில் ஊற்றி பயிற்சிக்கு முன்பாக
குடிக்கலாம்.''
ஆசான் வித்தியாபதி தனியாக வகுப்பு நடத்தியதில்லை. செஞ்சியைச் சேர்ந்த போலீஸ்
சம்பந்தம் என்பவருக்கு குத்து கற்றுக் கொடுத்துள்ளார். கராத்தே
நிபுணர்.இ.எஸ்.குமார் அவர்களுக்கு பிடிகள் கற்றுத் தந்துள்ளார். மேலும் தற்காப்பு
கலையில் எதையும் விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் கடந்த 20 ஆண்டுகளாக சென்சாய்.இ.எஸ்.குமார் அவர்களிடம் கராத்தே கலையை பயின்று ''கருப்பு பட்டையை'' பெற்றுள்ளார்.
[பேட்டி நாள்.-03.10.1998, பேட்டி கண்டவர்கள் - சென்சாய்.சி.இரா.இளங்கோவன் மற்றும் ஆ.கலைச்செல்வன், நன்றி- ‘’குரிசில்’’ செய்திமடல், பிப்.1999]

No comments:
Post a Comment