Tuesday 14 January 2014





       இப்படங்கள் யாவும் 1997-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படங்கள். ஷிட்டோ-ரியோ இந்தியன் கராத்தே பள்ளி 1977-ல் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது. அதன் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவில், இப் பள்ளியின் நிறுவனர் சென்சாய் இ.எஸ்.குமார் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திரு.வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், அணிவணிகர்.திரு.பாபழநி, ஆசான். சிதம்பரம் சக்கரவர்த்தி, ஆசான். மஞ்சகொல்லை இரத்தினசாமி, டாக்டர் சிதம்பரம், திரு.வே.மணிவாசகன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். சென்சாய்.சி.இரா.இளங்கோவன், டாக்டர்.விஸ்வநாதன், திரு.ஆ.கலைச்செல்வன்  ஆகியோருக்கு   நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.



































Tuesday 14 May 2013

ஆசான் சி.முட்லூர். சின்னத்தம்பி




சி.முட்லூர். சின்னத்தம்பி வாத்தியார் [செண்டுகாரர்]

                நலிந்துக் கொண்டிருக்கும் தமிழகத் தற்காப்புக் கலையின் முறைகளையும் நுணுக்கங்களையும் சேகிரித்து பதிவு செய்யவேண்டும் என்று திட்டமிட்டோம். தற்காப்புக் கலையினை நன்குணர்ந்த ஆசான்களைத் தேடி சந்திப்பது கடினமான காரியமானாலும், மிகவும் பயனுள்ள காரியமாகும். முதற்கட்டமாக வயதான மூத்த ஆசான்களை தேடி சந்திப்பது என்றும், அவர்களை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கடலூர் உள்ள மூத்த தற்காப்புக் கலை ஆசான்களின் பெயர்பட்டியல் தயார் செய்துக்கொண்டு பயணம் மேற்கொண்டோம்.

                தென்னார்காடு மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள சி.முட்லூரில் வசிக்கும் திரு.சின்னத்தம்பி வாத்தியார் அவர்களை குரு மரியாதை சகிதமாக சந்தித்தோம். எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவரை, வாழ்வின் அந்தியக்காலத்தில் சந்திக்க நேர்ந்துவிட்டதே என வருத்தமடைந்தோம். கொஞ்சம் நினைவு குன்றிய நிலையில் காணப்பட்டார். என்றாலும், கலையைப் பற்றி பேசப்பேச உற்சாகமடைந்து எழுந்தார், நாங்கள் ''ஒன்றும் செய்யாதீர்கள்'' என வேண்டியும், சில அடிமுறைகளை செய்துக்காட்ட எத்தனித்தார், ஆனால் உடல் ஒத்துழைக்காமல் களைப்படைந்தார். ''சில மாதங்களுக்கு முன்னால் வந்திருந்தால், முடிந்தவரை கலையை காட்டிக் கொடுத்திருப்பேனே'' எனக் கூறி கலங்கினார்.

                இவர் தன் இருபதாவது வயதில் இக்கலையை கற்க தொடங்கினாராம். கிட்டதட்ட 17 ஆசான்களை சந்தித்துள்ளார். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதும், தெரிந்துக் கொண்டதும் ஏராளமென்றார். ''ஒரே வாத்தியாரிடம் கற்றுக்கொள்வதைக் காட்டிலூம், பல வாத்தியார்களிடம் சென்றால்தான் கலையை முழுசா கற்றுக்கொள்ள முடியும்'' என்றார்.


                இவர் சிதம்பரம் வட்டத்தில் பு.முட்லூர், கவரப்பட்டு, பிச்சாவரம், தைக்கால், சின்னக்குடி, தா.சோ.பேட்டை மற்றும் செம்மங்குப்பம் [கடலூர்] போன்ற ஊர்களில் பள்ளிக் கூடங்கள் நடத்தியுள்ளார். என்றாலும், தன்னிடம் உள்ள கலை முழுமையும் கற்றுகொண்ட மாணவர் ஒருவருமில்லை என ஆதங்கமாக கூறினார்.
               
                இவர் ஆங்கிலேயர் காலத்தில், கனோசியிலிருந்து வாசனைப் பொருள்களை [செண்ட்] வரவழைத்து வியாபாரம் செய்து தனது வாழ்கையை நடத்திவந்தார். ஆகவே இவரை ''செண்டுக்காரர்'' என்று எல்லோரும் அழைக்கின்றனர். இவருக்கு ஐந்து பிள்ளைகள் என்றாலும் ஒருவர்கூட இக்கலையைக் கற்றுக்கொள்ளவில்லை.

                இவருக்கு பூரான் செரீப் விளையாட்டு, இஸ்தெல்லா விளையாட்டு, சிலம்பம், சுருள், பிடிவகைகள் போன்ற  தற்காப்புக்கலை வகைகள் தெரியும் என்றார். மேலும் ''சீலா'' என்கிற விளையாட்டும் தெரியுமென்றார். இவரிடம் பயின்ற உள்ளூர் மாணவர் திரு. சின்னத்தம்பி ''இவர் அதிகமாக பயிற்சி தந்தது ''சீலா'' விளையாட்டைதான். இது அதிகமான பிடிகளையும், அடிமுறைகளையும் கொண்டது'' என்றார். மேலும் குச்சி பிடிகளையும், குச்சிக்கு எதிர் பிடிகளையும் தங்களுக்கு சொல்லித் தந்ததாக கூறினார்.

                ''கலைக்கு  முடிவில்லை, அதற்கு வரம்பும் போடக்கூடாது'' என்று கூறிய போதிலும், எல்லாம் மூன்றுக்குள் அடக்கம்; ஒவ்வொன்றும் நான்கு பிரிவாகி மொத்தம் 12 ஆகிறது என்று வரையறைகளையும் கூறினார். அவைகள் என்ன என்று சரியாக சொல்லமுடியாமல், ''நிறைய மறதியாயிருக்கு'' என்று கூறி கலக்கமடைந்தார். வர்மம் பற்றி கேட்ட போது, ''மறைத்து வைத்து சொல்லித் தருவதெல்லாம் வர்மம்தான்'' என்றார். ''எதிரியின் நோக்கையும் அடிமானத்தையும் கொண்டு அவனை கணித்துவிடலாம்'' என்றார்.

                மறதியால் யோசனையில் மூழ்கினார், அவ்வப்போது வாத்தைகள் தடுமாறின, உடல் தளர்வும், கைகால் ஆட்டமும் காணப்பட்டன.

                ''பெற்றோர்கள் அடுத்த தலைமுறைக்கு சொத்துக்களை விட்டு செல்கிறார்கள், நாமும் மூதாதையரிடமிருந்து அதைத்தான் எதிர்பார்க்கிறோம். அவர்களின் அறிவு, அனுபவம் ஆகியவையும் தமக்கு தேவை என்பதை மறந்துவிடுகிறோம். ஆசானை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்''  என்று  அவருடைய இளைய மகனிடம் சொல்லிவிட்டு திரும்பினோம்.

[பேட்டி கண்டவர்கள் :- சி.இரா.இளங்கோவன் மற்றும் ஆ.மோகன்,   நாள் :- 20.12.1987, நன்றி :-''தூரிகை'' சனவரி,1988 ]

Sunday 12 May 2013

வர்ம ஆசான் பேத்தரசன்


வர்ம ஆசான் பேத்தரசன்

                கடலூரில் வசிக்கும் வர்ம ஆசான் ஏ.எஸ். பேத்தரசன் [75] அவர்களை  ''குரிசில்'' இதழில் வெளிவரும் ''தமிழகத்தில் தற்காப்புக்கலை'' தொடருக்காக 15.09.1987 அன்று சந்தித்தேன்.

                ஆசான் பேத்தரசன் அவர்களின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இராணுவத்தில் இருந்தவர். அதில் விளையாட்டுப் பிரிவில் இருந்ததால், பல நாடுகளுக்கு சென்று குத்து சண்டைப் போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார். இவர் ஈரான், ஈராக், எகிப்து, இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார். எகிப்து இஸ்மாலியாவில் நடந்த குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்றதையும்பஞ்சாபில் நடந்த போட்டிலும், தனது சொந்த  ஊரில் பல குஸ்தி வாத்தியார்களோடும் சண்டையிட்டு வெற்றி பெற்றதையும் நினைவு கூர்ந்தார்.
                இவர் சுதந்திரத்திற்கு முன்பே படையில் இருந்து ஓய்வுபெற்று, கடலூரில் குடியேறிவிட்டதாக கூறினார். இப்போது குறிப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு மட்டும் பயிற்சி தந்துக்கொண்டிருக்கிறார்.

                ஆசான் பேத்தரசன் அவர்கள் வர்மம், குஸ்தி, குத்துச்சண்டை, ராப்காட் [தற்காப்புகலை], வர்ம வைத்தியம் போன்ற கலைகளை கற்றுள்ளார். இவருடைய ஆசான், பாஞ்சாலங்குறிச்சி வர்ம ஆசான் குப்பண்ணன் அவர்கள். ஆசான் பேத்தரசன் அவர்கள் தனது ஆசானைப் பற்றி ''அவருக்கு தெரியாத கலைகள் எதுவுமில்லை, இவருக்கு தெரிந்த கலைகள் எல்லாற்றையும் தெரிந்தவர்கள் யாருமில்லை, அவர் சகலகலா வல்லவர்'' என்று பெருமைப்பட கூறுகிறார்.

                ஆசான் பேத்தரசன் அவர்கள் தான் கற்றுவைத்துள்ள கலைகள் எல்லாற்றையும் பிரித்து வகைப்படுத்தி வைத்திருக்கிறார். கழி விளையாட்டு என்பது ''இரண்டு சுற்று, ஒரு குத்து'' என்று கூறி விளக்குகிறார். ''குச்சி விளையாடும் போது, குச்சிப்படுகிற தூரத்திலிருந்து ஒரு அடி பின்னால் சென்றுவிட்டால் எளிதில் தப்பித்துவிடலாம். இரண்டு அடி உள்ளுக்கு வந்துவிட்டால் எளிதாக குச்சியைப் பிடித்துவிடலாம்.'' என்று கூறுகிறார். தலையடியையும், அறப்பையும் உள்ளுக்கு வந்து பிடித்துக் காட்டினார்.

                ''இவர் பலவித உடற்பயிற்சிகளைச் சொல்லித் தருகிறார். குறிப்பாக அனுமந்தா பஸ்கி, போஸ்ட் எக்ஸசைஸ் [ pole raising   ] சிறப்பானவை, மேலும் தண்ணீரில் செய்யக் கூடிய உடற்பயிற்சிகள் மிகவும் சிறப்பானவை'' என்று இவரிடம் பயின்றுவரும் திரு.வித்தியாபதி அவர்கள் தெரிவித்தார்.

ராப்காட்:- ஆசான் பேத்தரசன் அவர்கள் ''ராப்காட்'' என்ற தற்காப்புக்கலை ஒன்றை கற்றுவைத்துள்ளார். இது ஒன்பது அடிமுறைகளைக் கொண்டது என்றும், எதிரி எவ்வளவு வேகமாக வந்து தாக்கினாலும், மிக சுலபமாக ஒதுங்கி அதே வேகத்தில் எதிரியை தாக்கும் முறைகள் நிறைந்தது என்றும் கூறுகிறார். எவ்வளவு பெரிய பலசாலியான எதிரிகளைக்கூட ராப்காட் மூலம் மூலம் எளிதில் சமாளித்துவிடலாம் என்கிறார்.

வர்மம் :- மர்மம் என்பது மருவி வர்மம் என்றாகிவிட்டது என்றும், ''வர்மம் அடித்தால் கர்மம், எடுத்தால் தர்மம்'' என்றும் கூறுகிறார். ''வர்மம் மொத்தம் 36 தான், அவை உடலில் மூன்று பிரிவுகளில், பிரிவுக்கு 12- ஆக அமைந்துள்ளன'' என்று விளக்கமளிக்கிறார். தான் அகஸ்தியருடைய வர்மானிய முறைகளைப் பின்பற்றுதாக தெரிவிக்கிறார். இவர் தன் மாணவர்களுக்கு குஸ்தி, குச்சி, ராப்காட், குத்து, வைத்தியம் போன்றவற்றை சொல்லித் தந்துவிட்டு கடைசியாகத்தான் வர்மத்தை சொல்லித்தருவதாக தெரிவிக்கிறார்.

வைத்தியம் :- இவர் தற்காப்புக்கலை தொடர்பான எலும்பு முறிவு, சுளுக்கு, பிடிப்பு ஆகியவற்றிற்கு வைத்தியம் செய்கிறார். ‘‘சித்த வைத்தியத்தில் மூன்று பிரிவுகள் உண்டு. அவை, இரண வைத்தியம், இராட்ஸச வைத்தியம், இராஜ வைத்தியம். இதில் தற்காப்புக்கலை பயில்வோர் இராட்ஸச வைத்தியம் கற்று வைத்திருக்க வேண்டும்'' என்றார்.
அருக்கன் :- ''தற்காப்புக்கலை பயில்வோர் ''அருக்கன்''பற்றி தெரிந்திருக்க வேண்டும். அருக்கன் என்பது நாள், கிழமை, நேரத்துக்கு தக்கபடி மாறும். எதிரியைத் தாக்கும்போது அருக்கன் இருக்கும் திசையை அறிந்து அந்த திசையிலிருந்து எதிரியைத் தாக்கினால், எதிரி எவ்வளவு பலம் பெற்றவனாக இருந்தாலும் அவனை வென்றுவிடலாம்'' என்று நம்ப முடியாத கருத்தை கொண்டிருக்கிறார். மேலும், சாமுத்திகா இலட்சணம் மூலம் எதிரியைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்.

[பேட்டி :- சி.இரா.இளங்கோவன், நாள்- 15.09.1987,  நன்றி:- ''தூரிகை'' அக்டோபர் 1987.]

Saturday 11 May 2013

ஆசான் சங்கு சூடாமணி


ஆசான்  சங்கு  சூடாமணி

உலகில் உள்ள பல கலைகளுக்கு தமிழகம் மூல ஆதாரமாக இருந்துவந்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் பல ஆதிக்க சக்திகளினால் திசை திருப்பப்பட்டு அழிந்துக் கொண்டிருக்கின்றன.  தமிழகத்தில் அழிந்துகொண்டிருக்கும் பல்வேறு கலைகளை, மீண்டும் போற்றும் நோக்கத்தோடு ஆராய்ச்சியாளர்கள் நாட்டுப்புறப் பாடல், கூத்து, கும்மிப்பாட்டு, சித்தமருத்துவம் போன்றவற்றை தேடி தொகுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்காப்புக் கலைகளை மட்டும் யாரும் நாட்டமில்லாமல், கவனியாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். பல்வேறு தற்காப்புக்கலைகள் கடல்கடந்து சென்று திரும்பவும் புதிய பெயருடன் இங்கு அறிமுகம் செய்யப்படும் நிலைக்கு தாழ்ந்த நிலையில் உள்ளது.

                தற்போதுள்ள நிலையில், அழிந்துக் கொண்டிருக்கும் இக்கலையின் நுணுக்கங்களையும், செய்திகளையும் முழுமையாக திரட்டுது கடினமான பணியாகும். தமிழகத்தில் உள்ள பல தற்காப்பு ஆசான்களைச் சந்தித்து அனைத்து செய்திகளையும் ஆவனப்படுத்த முயன்றோம். இதனை தேடுகிற, திரட்டுகிற பணியை மேற்கொள்ளும்போது, இதில் விடுபட்டுள்ள நுணுக்கங்களும், தொக்கிநிற்கிற செய்திகளும் முழுமையாக கிடைக்காமல் போய்விடுமோ, என்ற பயமும் வருத்தமும் தோன்றுகிறது.

                தென்னார்காடு மாவட்டம், கடலூர் வட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தில் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கும் 69 வயது நிரம்பிய ''சங்கு வாத்தியார்'' என்றழைக்கப்படும் ''ஆசான் சங்கு சூடாமணி'' அவர்களை சந்தித்தோம். அவரிமிருந்து பல அரிய செய்திகள் கிடைத்தன.

                இவர் ஊரில் ஏற்பட்ட சண்டைக் காரணமாக தனது 17-வது வயதில் சண்டைக் கலையாகிய ''குத்து'' கலையை கற்க கிளம்பினாராம். தனது முதல் வாத்தியார் பரங்கிப்பேட்டை சின்னக் கடைத்தெரு ''அச்சாபக்கிரி'' என்பவராம். அக்காலத்தில் பிடி போடுவதில் தலைசிறந்த இவரிடம் ''ஒத்தை பின்னல், இரட்டைப் பின்னல், ஒத்தை தந்தி, இரட்டைத் தந்தி, ஒத்தை மல்லி, இரட்டை மல்லி, இரட்டைக் கொக்கி, உள்சாவி, வெளிசாவி, உள்கத்தரி, வெளிக்கத்தரி, என்று 64 வகையான பிடிகளை'' கற்றுக்கொண்டாராம். பிறகு சிதம்பரம் அருகில் உள்ள பு.முட்லூரில் உள்ள ''அமீர்'' என்பவரிடம், குத்துக் கலையில் சிறந்த ஒன்றாக கருதப்படும் ''இஸ்தெல்லா'' விளையாட்டை கற்றுக்கொண்டாராம். பின்பு நாகப்பட்டிணம் அருகில் உள்ள திட்டைச்சேரி வடவாதிமங்கலம் சென்று ''பூரான் செரீப்'' என்பவரிடம் பயிற்சி பெற்றுள்ளார். இவருடைய கலைக்கே ''பூரான்செரீப்'' விளையாட்டு என்று வழங்கப்படுவாக குறிப்பிட்டார். பூரான் செரீப் மைத்துனர் ''இரட்டைமதகு ஈசூப்'' என்பவரிடம் சில வருடங்கள் சில அடிமுறைகளைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
               
                மேலும் மதுரை மாவட்டம், அம்பாள்சமுத்திரம் பொன்னையாத் தேவர், திருநெல்வேலி தங்கவேல் பயில்வான் ஆகியோரிடம் சென்று சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

                இவர் கற்றுக்கொண்ட கலைகளிலேயே ''இஸ்தெல்லா விளையாட்டும், பூரான்செரீப் விளையாட்டும்'' தான் சிறந்ததாம். இந்த இரண்டையும் நன்றாக கற்றுக்கொண்டால், யாரிடம் வேண்டுமானாலும், எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் சண்டை செய்யமுடியும் என்று திட்டவட்டமாக கூறுகிறார்.

                இவர் தனது 30-வது வயதில் பல போட்டிகளில் கலந்துக்கொண்டதாக கூறுகிறார். சிதம்பரம் டவுன்ஹால் மைதானத்தில் ''அமர்சிங் பயில்வானையும், சேலம் நேரு மைதானத்தில் கொத்தனார் கந்தசாமி பயில்வானையும், திருநெல்வேலியில் இராசாமணி பயில்வானையும் வென்றதாக கூறுகிறார். அக்காலத்தில் இவரை ''திக்கெட்டும் திடுக்கிடும் சங்குசூடாமணி பயில்வான்'' என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள் என்று கூறி பெருமைபடுகிறார்.

                இவருக்கு மோகன் குமாரமங்கலம் நெருங்கிய நண்பராம். அக்காலத்தில் அவரின் வேண்டுகோளின்படி சிலருக்கு பயிற்சி தந்ததாக கூறுகிறார். இவருடைய மாணவர்களில் முக்கியமானர்கள் நடுவீரப்பட்டு எஸ்.தேவநாதன், காராமணிகுப்பம் வித்தியாபதி, மற்றும் சென்னையில் சென்சாய் இ.எஸ்.குமார் ஆகியோர் என்றார்.

                இவரிடம் கிட்டதட்ட 30 ஆண்டுகாலமாக பயிற்சி பெற்றுவரும் தேவநாதன் ''தமிழகத்திலேயே பூரான்செரீப், இஸ்தெல்லா விளையாட்டை முழுமையாக தெரிந்து வைத்துள்ளவர் இவர்தான். இவரிடம் 30 ஆண்டுகாலமாக பயிற்சி பெற்றாலும் கலையை முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை, அந்த அளவிற்கு நிறைய நுணுக்கங்களை வைத்துள்ளார்'' என்று கூறுகிறார்.

ஆசான் சங்குசூடாமணி அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசான்களைப் பற்றி, அவரே அளித்த தகவல்களின் அடிப்படையில் தொகுத்த செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம்.

இஸ்தெல்லா:- இவரின் குத்துக் கலைக்கு ''இஸ்தெல்லா விளையாட்டு'' என்று பெயர். இவரை ''அமீது'' என்று அழைப்பார்கள். சிதம்பரம் அருகிலுள்ள பு.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் விளையாட்டு மிகுந்த கட்டுமானங்களைக் கொண்டது. மொத்தம் பத்து அடிமுறைகளைக் கொண்டது. கையை மூடிக் குத்தும் முறைகளும், எதிரியிடம் நெருங்கி விளையாடும் நுணுக்கங்களையும் கொண்டது. இவர் வெளிநாடுகளைக்கு சென்று இக்கலையை சொல்லிக் கொடுத்ததாக அறியப்படுகிறது.

பூரான்செரீப்:- இவருடைய கலைக்கு ''பூரான்செரீப் விளையாட்டு'' என்று பெயர். இக்கலை எதிரியை நெருங்கவிடாமல் தாக்குவது இவரின் விளையாட்டு. இது ''ராஜா விளையாட்டு'' என்று சிறப்பாக பாராட்டப்படுகிறது. கையை திறந்த நிலையில் வைத்து, குறிப்பாக புறங்கை அடிகள் நிறைந்தது. இவரின் விளையாட்டில் கைக்கு தான் அதிகவேலை. இவருடைய மகன் ''முஸ்தபா'' தற்போது இக்கலையை சொல்லிக் கொடுப்பதாக தெரிகிறது. இவர் சிங்கப்பூர் சென்று பயிற்சி அளித்ததாக அறியப்படுகிறது.

                தமிழக குத்துக்கலை ''இஸ்தெல்லா விளையாட்டு' மற்றும் ''பூரான்செரீப் விளையாட்டு'' என இரண்டு பெரும் பிரிவாக சிறப்புபெற்று விளங்குவதை அறியமுடிகிறது.

இரட்டைமதகு ஈசூப்:- இவர் பூரான் செரீப் மைத்துனர். இவருடைய விளையாட்டில் கால் அடிகள் நிறைய உண்டு. இவர் காலால் இரண்டு மதகுகளை ஒரே அடியில் உதைத்து உடைத்ததால் சிறப்புப் பெயராக ''இரட்டைமதகு ஈசூப்'' என்று அழைக்கப்படுகிறார்.

அச்சாபக்கிரி:- இவர் பரங்கிப்பேட்டை சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர். தமிழத்தில் உள்ள 64 பிடிகளுக்கும் இவர்தான் வாத்தியார். அக்காலத்தில் பிடிபோடுவதில் இவருக்கு நிகராக யாரும் இல்லை என புகழப்படுகிறார். இவருடைய விளையாட்டு ''காட்டா குஸ்தி, போட்டா போட்டி'' என்று அழைக்கப்படுகிறது.

[பேட்டி கண்டவர்கள் :- சி.இரா.இளங்கோவன் மற்றும் வே.மணிவாசகன். நாள்:- மே.1987. நன்றி:-''தூரிகை'' ஜூலை.1987]